சொர்க்கத்தில் நுழைபவை


அவ்வப்பொழுது

சில நாய்கள் குரைக்க மறந்துவிடுகின்றன,,,

அவ்வப்பொழுது

மறுஜென்மம் பற்றிய நினைவுகள் பயமுறுத்துகின்றன

அவ்வப்பொழுது

சில சந்திப்புகள் நிகழாமலே போய் விடுகின்றன

அவ்வப்பொழுது

நிகழக்கூடாத சந்திப்புகள் நிகழ்ந்தே விடுகின்றன

அவ்வப்பொழுது

பதின்ம வயது வாழ்த்து அட்டைகள் புன்னகைக்க வைக்கின்றன

அவ்வப்பொழுது

துயரங்கள் தொலைபேசி வழியாக வருகின்றன

அவ்வப்பொழுது

சில துரத்தல்களில் இரைகள் மாட்டிக்கொள்கின்றன

சில தப்பித்து விடுகின்றன

அவ்வப்பொழுது

கோடையிலும் போர்த்திக்கொண்டு தூங்க வேண்டியதாகிறது

அவ்வப்பொழுது

மார்கழி மத்தியிலும் மழை பெய்துவிடுகிறது

அவ்வப்பொழுது

தூக்க மருந்துகள் வேலை செய்கின்றன

அவ்வப்பொழுது

நாம் விரும்பும் அணி ஜெயித்துவிடுகிறது

அவ்வப்பொழுது

நல்ல கவிதைகள் சில கசங்கிப்போகின்றன

அவ்வப்பொழுது

சில அரசாங்க ஆணைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன

அவ்வப்பொழுது

சில இயற்கை மரணங்கள் துர்மரணங்களாகின்றன

எனினும்

முதல் காதல்

முதல் முத்தம்

முதல் மழை மட்டும்

சில அவ்வப்பொழுதுகளில் சிக்காமல்

முதலாவதாகவே சொர்க்கத்தில் நுழைகின்றன..!

*************************************************************************************

Comments