சுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்!

ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை அனுசரிக்கக் கிளம்பி விடுவார்கள். மன்னிக்கவும் சாலமன் பாப்பையாவை விட்டுவிட்டேன். சுதந்திர தினைத்தை இவ்வாறு தான் கொண்டாட வேண்டுமென்று கட்டாயப் பாடமாக வாங்கி கொடுத்த புண்ணியவான்கள் எதுவும் எழுதி வைக்கவில்லையாதலால் எஸ்கேப் சினிமாஸ் போய் ஒரு சினிமா பார்த்துவிட்டு பீச்சுக்குப் போய் மாங்காய் பத்தை ஒன்றை முழுங்கி ஒரு விடுமுறை நாளை சுதந்திரமாகக் கழித்தால் அதுவும் சுதந்திர தினக் கொண்டாட்டமே.

 வடக்கே காஷ்மீர், கிழக்கே மாவோயிஸ்ட்கள் தெற்கே ஈழம் , நடு நடுவே மெகா சைஸ் ஊழல்கள் , அவ்வப்போது மதக் கலவரங்கள், குண்டு வெடிப்பு எல்லம் இருந்து இந்தியா எனும் கூட்டமைப்பு இத்தனை வருடம் தாக்குப் பிடிக்கிறது என்பதே விசேஷம். கிரிக்கெட்டும் போர் வந்தால் வரும் தேசிய உணர்வுமே இதற்கு காரணம் என்பது அபத்தம். இத்தனை கலாசாரம் மொழி சாதி என வேறு பாடுகள் கடந்தும் ஒன்றாக இருப்பதற்கு வேறு பல காரணங்கள் இருக்க வேண்டும். கார்கில்களின் போதும் உலகக் கோப்பையிலும் நமது தேசிய உணர்ச்சிகள் தட்டியெழுப்பப் படுகிறது. அவ்வளவே! ஒரு யோக்கியமான காரணம் நமது குடும்ப அமைப்புகளும் சனாதனமான வாழ்க்கை முறையும். லஞ்சம் பேராசை , வாய்ப்புக் கிடைத்தால் எந்த விதமான சட்ட மீறலும் செய்யலாம் என்கிற அலட்சியப் போக்கு என அயோக்கியமான காரணங்கள் நூறு இருக்கிறது. ஒன்று பட்ட இந்தியா என்பதே 65 வருடங்களாகத்தான் இருக்கிறது. அதற்கு முன் எதை உத்தேசித்து பிரிட்டிஷாரிடம் விடுதலை வேண்டுமென்று எத்தனையோ பேர் உயிரை விட்டார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

 விடுதலை இந்தியாவின் ஆகச் சிறந்த சாதனை 562 துண்டு ராஜ்யங்களை ஒன்றாக இணைத்து ஒரே தேசமாக மாற்றியது தான். உலகில் எங்கும் நடக்காத அதிசயம் இது. அதற்கு பிறகு நாம் எதையும் குறிப்பிட்டுச் செய்யவில்லை என்பதே நிதர்சனம். காங்கிரஸ் இத்தனை வருடங்களாக ஏழ்மையை ஒழித்துக் கொண்டேயிருக்கிறது. ஊழல்கள் லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. மீடியா சர்வ பலம் பெற்றிருக்கிறது. விவசாயிகளை சகஜமாக தற்கொலை செய்ய வைத்திருக்கிறோம். கருத்து சுதந்திரம் என்கிற ஒன்று இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றி வந்திருக்கிறோம். நம்மால் ஆளுங்கட்சியை விமர்சித்தோ கிண்டலடித்தோ ஒரு சினிமா, ஏன் மேடை நாடகம் கூட நடத்திவிட்டு நிம்மதியாக உறங்க முடியாது. உதாரணம் மம்தா பான்ர்ஜிக்கு தன்னைத் தவிர வங்காளத்தில் எல்லோரும் மாவோயிஸ்ட்கள் என்கிற பிரமையில் யார் யாரையோ பிடித்து உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலோ முதலமைச்சரை நேரில் பார்க்கவே முடியாது. கேள்வி கேட்பதை எல்லாம் நினைத்துப் பார்ப்பதே கூட ஒரு டார்க் ஹ்யூமர் தான். கல்வி சுதந்திரம் என்பது நம் அடுத்த தலைமுறை தலைவர்களை திரையரங்குகளில் தேட வைத்திருக்கிறது. பொருளாதார சுதந்திரமோ நாள் ஒன்றுக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவன் மிடில் கிளாஸ் என்று அறிவிக்கிறது.

 இந்த தேசம் அதிகப்படியான சுதந்திரத்தை வழங்கியிருப்பது கிரிமினல்களுக்கும் , கிரிமினல் அரசியல்வாதிகளுக்கும் தான். தண்டனை என்கிற பயமே இல்லாமல் எந்தத் தவறை செய்துவிட்டும் ஒலிம்பிக்கில் கோல்ட் மெடல் வாங்கித்திரும்பி வந்தது போல் திகாரிலிருந்து வெளியே வரலாம். வந்து அன்னை தெரசா ரேஞ்சுக்குப் பேட்டியும் கொடுக்கலாம். ராம் லீலாவில் உண்ணாவிரதம் இருந்தால் அரசாங்கம் சுத்தமாகி விடும் என்கிற அபத்தங்களும் ஃபேஸ்புக் ஃபோட்டொஷாப் புரட்சியாளர்கள் நாட்டைத் திருத்த உடன் வருவார்கள் என்று நம்புவதும் நாம் பெற்ற சுதந்திரம் தரும் கடை கட்ட நம்பிக்கை. எங்கே தவறு நிகழ்கிறது என்பதை ஒன்று கூடி ஒரு நிமிடம் சிந்தித்தால் போதும், வல்லரசாகவெல்லாம் வேண்டாம் , குறைந்த பட்சம் யோக்கியமான ஒரு நாடாகவாவது இருக்கலாம்.

 இத்தனை இனம் மொழி கலாசாரம் கூட்டாகக் கிடத்த இந்த தேசம் என்பது நமக்கு கிடைத்த ஒரு அற்புத விளக்கு. சரியாகத் தேய்த்தால் நல்ல பூதம் வெளியே வரும். ஆனால் கையில் விளக்கு தான் இருக்கிறது என்பது தெரிய வேண்டுமே!

Comments

  1. ஒன்றுபட்ட இந்தியா இத்தனை வருடம் சாத்தியமானது பற்றிய ஆச்சர்யமே வேண்டாம். இதே ரீதியில் போனால் இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் புண்ணியத்தில் நாடு நட்டுக்கும்.

    இந்தியாவை ஒன்றுபடுத்தியது போக பெரிய சாதனை என்று பார்த்தால், மக்கள் அனைவரையும் மாக்கள் ஆக்கியது என்று சொல்லலாம். எவ்வளவு ரத்தம் சிந்தி போராட்டம் செய்து உயிரைக் கொடுத்த தலைமுறை போய், லஞ்சம் வாங்காத தலைமுறை போய், இப்போது எது வேண்டுமானாலும் பண்ணலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் பண்ணலாம்; எப்படி வேண்டுமானாலும் பண்ணலாம் என்று மக்களை பணமே பிரதானம் என்று மாற்றிய புகழ் கட்சிகளுக்கு குறிப்பாக காங்கிரஸ்க்கு உண்டு. உலகில் வளரும் நாடுகளில் எங்காவது இவ்வளவு சொரணை கெட்ட மக்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

    அதே போல, சுதந்திரம் வாங்கி ஒன்றுபட்டதாய் சொல்லிக்கொண்டு இத்தனை வருடம் ஆன பின்பும் இது என் பஞ்சு மிட்டாய், அது என் லாலிபாப் என்று மாநில அரசுகள் அடித்துக் கொள்வது ஆகச் சிறந்த சாதனை.

    இதையெல்லாம் விட, facebook, twitter போன்ற இடங்களில் (மட்டும்) புரட்சி செய்யும் புதிய தலைமுறை...
    அடடடா...

    விளக்கை விடு மச்சி. விளக்கெண்ணெய் கூட மிஞ்சாது.

    ReplyDelete

Post a Comment