அலுக்காதவை!


சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
நிலா வானம் கடல்தீரம்
வெற்றுத்தாள்களில் மந்திரம்
உச் கொட்டும் கதவுகள்
அலமாரியில் உறங்கும் நினைவுகள்
யாருக்காக இதெல்லாம்
வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளலாகாது
என்கிறான் ஸ்டீஃபன் ஹாகிங்க்ஸ்
முன்னாள் காதலிகளோடும் என்கிறான் தனபால்
தனபால் பொய் சொல்வதரிது
தனபால் காதலில் தோற்றவன்
மீண்டும் மீண்டும் தோற்றவன்
தோற்றவன் சொல்லுக்கு மதிப்பதிகம்
தோற்றுப்போன காதல்களே கவனிக்கப்படுகின்றன
காதல்கள் தெய்வீகமானவை
தெய்வீகமானவை அனைத்தும் பொய்கள்
பொய்களால் காதல் உருவாகிறது
உலகம் உருண்டை என்பது விஞ்ஞானம்
விஞ்ஞானம் விளக்கம் கேட்டு நிற்கிறது
விளக்கங்கள் சொற்களாலானது
சொற்கள் இடம் மாறுகின்றன
இடம் மாறுதல் இயற்கை
இயற்கை புதிரானது
எல்லாப் புதிர்களுக்கும் விடைகளுண்டு
விடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்
எனினும் சகவாசியே!
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
*************************************************************************************

Comments

  1. சில காதல் கவிதைகள்
    அலுப்பதேயில்லை!

    ReplyDelete
  2. அருமையான கவிதை .. அலுக்காமல் பல முறை வாசித்து விட்டேன்.. அர்த்தங்களின் அந்தாதி !

    ReplyDelete

Post a Comment