ஞாநியின் "பலூன்" - நவீன நாடகத்தின் முகம்

பொதுவாக தமிழில் சீரியஸ் நாடகங்கள் வரவேற்கபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. அதற்கு காரணம் சீரியஸாக எந்தப் பிரச்சினையையும் அவை பேசுவதில்லை என்பதால் தான்.முழுக்க முழுக்க டாகுமெண்டரி ரீதியில் கொடுக்கப்படும் எந்தப் படைப்பும் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையாது. பார்வையாளனின் விருப்பத்துக்கிணங்க படைப்பை
செழுமைப் படுத்தினால் அதற்கு கமெர்ஷியல் சாயம் வந்து விடும். படைப்புக்கேற்ப பார்வையாளன் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளும் நிலை சத்தியமாக அருகில் இல்லை.

இன்று ஞாநியின் "பலூன்" நாடகத்துக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. முப்பது வருஷங்களுக்கு முன்பு எழுதிய,மேடையேற்றப் பட்ட நாடகத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டினர், பரீக்ஷா நாடக குழுவினர். பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து வித்தியாசமான முறையில் போராடும் ஆறு இளைஞர்கள்,கலகம் தூண்ட முற்படுவதாகச் சொல்லி அரசாங்கத்தால் கூண்டிலேற்றப்பட்டு, நீதி மன்ற விசாரணையை எதிர்கொள்வதே நாடத்தின் கரு. தலித்,புரட்சி கவிஞன்,தொழிற்சங்கவாதி , வேலையில்லாத இளைஞன்,புதுமைப்பெண்,முஸ்லிம் பெரியவர் என வேறு வேறு சமூகத் தளத்திலிருப்பவர்கள் பொதுப் பிரச்சினைக்காக ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள்.அவர்கள் மேல் போலீஸ் அடக்குமுறையை ஏவுகிறது. பத்திரிக்கையாளர்,
கல்லூரி மாணவர் என பொய் சாட்சிகளைத் தயார் செய்து ஆறு பேருக்கும் தண்டனை
வாங்கிக் கொடுத்து விடுகிறது. பிறகு ரொம்ப வருஷங்கள் கழித்து ஒவ்வொருவரும்
என்னவாக ஆகியிருக்கிறார்கள் என்பதோடு நாடகம் முடிகிறது.

இன்றைக்கு பஸ் கட்டணம் பற்றியெல்லாம் நாம்
யோசிப்பதற்குள் நம் அன்றாட அலுவல்கள், நம்மை ஆக்கிரமித்து விடுகினன.தவிர முப்பது
வருடங்கள் முன்பு இருந்த பிரச்சினைகளோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளக்
கடினமாக இருக்கிறது.மேலும் முதல் அரை மணி நேரம் ஒவ்வொருவரும் வந்து நீண்ட
தன்னிலை விளக்கம் கொடுத்துக் கோண்டிருக்கிறார்கள்.தேவை இல்லாதது! கோர்ட் சீன்
ஆரம்பித்த பின்னரே நாடகம் சூடு பிடிக்கிறது.அங்கங்கே சறுக்கினாலும் , ஜட்ஜாகவும்
வக்கீல்களாகவும் நடித்தவர்கள் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.இந்த வகையான
போராட்டங்கள் மக்களின் சுரணையை தட்டி எழுப்பவே என்று நியாயப் படுத்துவர்கள்
பிற்காலத்தில் சுயநலவாதிகளாக மாறுவது ஏன்?புரட்சி புரட்சி என்று கோபப்படுபவர்கள்,
ஆதிக்க சக்தியை எதிர்ப்பவர்கள் பின்னாளில் தங்கள் கையில் பவர் வந்ததும் அரசியல்
தரகர்களாகவும், மேல்தட்டு அயோக்கியர்களாகவும் எவ்வாறு மாறிப் போவார்கள்? ஞாநி தான்
பதில் சொல்லவேண்டும்.

இதற்கு முன்னாலும் An Inspector Calls இன்
தமிழாக்கம், "எண் மகன்"(ண் தான்) என்று பரீக்ஷாவின் நாடகங்களைப்
பார்த்திருக்கிறேன்.ஆனால் "பலூனி"ல் ஏதோ ஒன்று குறைகிறது.எப்படி இருந்தால் என்ன?
இம்மாதிரியான முயற்சிகளுக்கு நாம் பகிரங்கமாக ஆதரவு தர வேண்டும்.அரங்கம் முழுதும்
இரண்டு காட்சிகள் நிறைந்தாலும்,செட் போட செலவழித்த காசு கூட வராது என்று
நினைக்கும் போது சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது.ஆங்கில நாடகங்களுக்கு 250,350 என
வாரி வழங்கும் மக்கள் நம்மவர்களையும் தான் கொஞ்சம் கவனியுங்களேன்! நடித்தவர்களில்
பெரும் பாலும் தொழில்முறை நடிகர்கள் இல்லை என்பதால் இதுவே சராசரிக்கும்
மேல்.குறிப்பாக அந்த பெண் நிருபராக வருபவர் ரொம்பவும் யதாத்தமாக நடித்திருந்தார்.ஒரு
ஞாயிற்றுக் கிழமை மதியத்தை உருப்படியாக மாற்றிய ஞாநிக்கு Hats Off!

மொத்தத்தில் பலூன் - Beautifully Narrated but Fairly Executed.

Comments

Post a Comment